இந்த கோர்ஸ்களில் உள்ளது
மார்ச் 2020, மனிதக் குலம் மறக்கவே முடியாத மாதமாகி போனது. காரணம், அதிக தொற்றுவீதம் கொண்ட கொரோனா வைரஸின் பரவல். இதுவரை நாம் கனவிலும் நினைத்திராத கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் விதித்தன. இந்தத் தொற்று பல தொழில்களை முடக்கினாலும் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அப்படிபட்ட ஒன்று தான் கிளவுட் கிச்சன். எங்கோ கேட்டது போல் உள்ளதா? கணினி அல்லது அலைபேசியில் சேமிப்பகம் நிரம்பிவிட்டால் மீதமுள்ளவற்றை நமது கிளவுட் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தும் முறையை கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கு ஒரு தேர்வாக வழங்கியுள்ளன. இங்கு கிளவுட் கணக்கு என்பது மெய்நிகர் கணக்கு. அதுபோல் வழக்கமான உணவகம் போல் இல்லாமல் இணைய வழியில் இயங்கும் உணவகமே கிளவுட் கிச்சன். இந்த உணவகத்தில் நீங்கள் நேரடியாக எதையும் பார்க்க முடியாது. ஆர்டர் செய்துவிட்டால் உங்கள் உணவு நீங்கள் இருக்கும் இடம் தேடி வந்துவிடும். நீங்கள் உணவகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாக, இது இணைய வணிக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்று செயல்படுகிறது.